திருச்சி அதிமுகவினரின் கடும் எதிர்ப்பால் அனைவரும் விடுதலை

திருச்சி அதிமுகவினரின் கடும் எதிர்ப்பால்  அனைவரும் விடுதலை
X
யார் அந்த சார் ?என்ற முழக்கத்துடன் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நீண்ட போராட்டதிற்கு பிறகு விடுவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொண்டர்கள் பலரும் கருப்பு உடை அணிந்து யார் அந்த சார்? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் முன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் வேனில் ஏற்றி திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக மாலை 6 மணிக்குள் விடுவிக்கப்படும் நிலையில் இரவு 7 மணி ஆகியும் காவல்துறையினர் அதிமுகவினரை விடுவிக்கவில்லை. இதனை கண்டித்து மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஏழு மணிக்கு மேல் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அனைவரும் காவல்துறையினருக்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.
Next Story