மீன் குஞ்சுகள் வளர்ப்பு

X
அணை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறை சார்பில் பவானிசாகர் அணை பகுதியை ஒட்டி மீன் வளர்ப்பு நாற்றங்கால் அமைத்து மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் விட்டு அணை மீன்களான ரோகு, கட்லா, மிருகால் வகை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்ய மீன் வளர்ச்சி துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 10 மாதங்களுக்கு மேல் நீர் இருப்பு உள்ள ஏரி, குளங்கள், குட்டை, கண்மாய்களை மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஒரு ஹெக்டர் பரப்புள்ள நீர் நிலையில், 2000 மீன் குஞ்சுகள் வீதம், 70 ஹெக்டர் பரப்பளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகளை மீன் வளர்ச்சித்துறையால் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:- பவானிசாகர் அணைப்பகுதியில் உள்ள மீன் நாற்றங்கால் மூலம் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளங்களில் விட்டு மீன் வளர்ப்பை அதிகப்படுத்த மீன் வளர்ச்சி துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக மாவட்டத்தில் 10 மாதங்கள் வரை நீர் வற்றாமல் இருக்கும் ஏரி, குளங்களை தேர்வு செய்து ஒரு ஹெக்டருக்கு 2000 மீன் குஞ்சுகள் வீதம் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட முடிவு செய்திருந்தோம். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் பவான, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பத்து மாதங்கள் வரை நீர் வற்றாமல் இருக்கும் ஏரி, குளங்களை தேர்வு செய்து 1.40 லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு இருக்கிறோம். இதன் மூலம் மீன் உற்பத்தியை பெருக்க முடியும். நீர்நிலைகளில் விடப்படும் மீன் குஞ்சுகளில் 20 சதவீதம் வரை உயிரிழந்தாலும் மீதமுள்ள 80 சதவீதம் மீன்கள் வளர்ச்சி பெறும். மீன் குஞ்சுகள் விடப்படும் ஏரி, குளங்களை ஊராட்சி நிர்வாகிகள் மூலமாக கண்காணித்து வளர்ந்த மீன்களை ஊராட்சி நிர்வாகமே ஏலம் இட்டு வருவாய் ஈட்டிக் கொள்ளலாம். 10 மாதங்கள் வரை நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த மீன்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

