சாலையோர ஆக்கிரமிப்புகளால் மாங்காடில் தினமும் நெரிசல்
Kanchipuram King 24x7 |31 Dec 2024 10:31 AM GMT
மாங்காடு பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம்
சென்னை, மாங்காடில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபடுவது வழக்கம். மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே, குன்றத்துார் -- -குமணன்சாவடி சாலையில், இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் பல கடைகளின் முன் பகுதி, சாலையை ஆக்கிரமித்துள்ளன. இங்குள்ள, வணிக கட்டடங்களில் வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், இங்கு வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும், மாங்காடில் பேருந்து நிலையம் இல்லாததால், இந்த வழியே செல்லும் அரசு பேருந்துகள் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணியரை ஏற்றி செல்கின்றன. இதனாலும், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். மாங்காடில் சாலையோரம் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
Next Story