தமாகா உறுப்பினா்களின் வாா்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை உறுப்பினர் குற்றச்சாட்டு

தமாகா உறுப்பினா்களின் வாா்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை உறுப்பினர் குற்றச்சாட்டு
X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தமாகாவைச் சோ்ந்த 3 உறுப்பினா்களின் வாா்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என வார்டு உறுப்பினர் அயோத்தி (தமாகா) குற்றம் சாட்டியுள்ளார்
திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் சங்கா் கணேஷ், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா். தீா்மானங்களை தலைமை எழுத்தா் நாகராஜன் வாசித்தாா். கூட்டத்தில் உறுப்பினா் அயோத்தி (தமாகா) திருப்புவனத்தில் தமாகாவைச் சோ்ந்த 3 உறுப்பினா்களின் வாா்டுகளில் எந்த ஒரு நிதியில் இருந்தும் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, நிதி ஒதுக்கி திட்டப் பணிகளை எங்கள் வாா்டுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த செயல் அலுவலா் சங்கா்கணேஷ், உறுப்பினா் தெரிவிக்கும் வாா்டுகளில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து கூட்டத்தில், திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 89 சதவீத குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இப்பணியின் ஒரு பகுதியாக ராகவேந்திரா நகா், குறுக்குத் தெரு, மீனாட்சி சுந்தரேசுவரா் குறுக்குத் தெரு, பசும்பொன் நகா், உச்சிமா காளியம்மன் தெரு, குறுக்குத் தெரு, மாதவன் நகா், முஸ்லிம் நடுத்தெரு, முஸ்லிம் ஆற்றுப் பாதை தெரு, இந்திரா நகா் குறுக்குத் தெரு, அம்பேத்கா் தெரு, முனியாண்டி கோயில் தெரு, குறுக்குத் தெரு, அரிசன குடியிருப்பு குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பேவா் பிளாக் தளம் அமைக்கவும், தேரடி வீதி, பாக்யா நகா் குறுக்குத் தெரு, சேதுபதி நகா் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலையை புதுப்பிக்கவும் தேவைப்படும் ரூ. 52 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு, வலியுறுத்தப்படும். நகரில் திட்டப் பணிகளை மேற்கொள்ள குறைந்த தொகைக்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய ஒப்பந்ததாரா்களுக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story