வியாபாரம் சூடு பிடித்தது

வியாபாரம் சூடு பிடித்தது
X
உள்ளூர் வியாபாரிகள் குவிந்ததால் ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காந்திஜி ரோட்டில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் வளாகம், அசோகபுரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி வார சந்தைகள் செயல்பட்டு வருகிறது. வேட்டி, சேலைகள், குழந்தைகளுக்கான ரெடிமேட் சட்டைகள், துண்டு, லுங்கிகள், நைட்டி என அனைத்து வகையான காட்டன் துணிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஜவுளி வார சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவார்கள். இதைப்போல் கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மாநில வியாபாரிகள் மொத்த விலையில் துணிகளை வாங்கி செல்வார்கள். மற்ற இடங்களை விட இங்கு விலை குறைவு என்பதால் வார ஜவுளி சந்தை நடைபெறும் நாட்களில் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காட்சியளிக்கும். இங்கு சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். தீபாவளிக்கு பிறகு ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஓரளவு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது.ஈரோடு காந்திஜி ரோட்டில் சென்ட்ரல் தியேட்டர் வளாகத்தில் ஜவுளி வார சந்தையை ஒட்டி ஈரோடு, குமாரபாளையம், திருப்பூர், திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறு வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்திருந்தனர். நாளை புத்தாண்டு வர உள்ளதால் இன்று கூடிய சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சிறு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இன்று காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது. இதேபோல் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் ஸ்வெட்டர் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.இதனால் சில்லரை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, தீபாவளிக்கு பிறகு வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை வர உள்ளதால் மீண்டும் ஜவுளிவார சந்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று கூடிய சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்ததால் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இன்று மட்டும் 40 சதவீதம் சில்லறை வியாபாரம் நடைபெற்றது. ஆனால் அதே சமயம் ஆந்திரா கர்நாடக கேரளாவிலிருந்து வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை மந்த நிலையில் இருந்தது. இன்று வெறும் 10 சதவீதம் அளவே மொத்த வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 2 வாரத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் வரும் வாரத்தில் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என ஜவுளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story