மழையால் பதராகிப் போன நெற்பயிர்களுடன் இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு
Thanjavur King 24x7 |2 Jan 2025 11:52 AM GMT
விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ராயந்தூர், சித்தாயல், குணமங்கலம், வைர பெருமாள்பட்டி, அய்யாசாமிபட்டி, மருதக்குடி , திருவேங்கட உடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த, ஏராளமான விவசாயிகள் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பதரான நெற்பயிர்களுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த மாதம் பெய்த கனமழையால், கதிர் வரும் நிலையில் இருந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, நெல்மணிகள் எல்லாம் பதராகி விட்டது. மேலும், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டை வரை மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 35,000 ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முறையாக கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கள்ளப்பெரம்பூர் ஏரியில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் உள்ளது. அந்த காட்டுப் பன்றிகள், பயிர்களை அழித்து விடுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளை பிடிக்க வேண்டும் என ஏற்கனவே மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், எங்கள் பகுதிகளில் சில இடங்களில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவை உள்ளது. அதற்கு ஏற்ப, பாசனத்திற்காக தண்ணீரை திறக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் 6 ஆம் தேதி பூதலூரில், விவசாயிகள் அறப்போராட்டம் நடத்துவோம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story