அதிமுக மாவட்டச் செயலாளரை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு
Sivagangai King 24x7 |3 Jan 2025 1:58 AM GMT
சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி, சிவகங்கையில் அக்கட்சி நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராக செந்தில்நாதன் எம்எல்ஏ உள்ளார். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக கடந்த அதிமுக ஆட்சியில் பொறுப்பு வகித்த பாஸ்கரனை இவர் ஓவர் டேக் செய்து, 2021 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்புப் பெற்றார். அந்தத் தேர்தலில் வென்று எம்எல்ஏவாக உள்ளார். இதனால் மாவட்டத்தில் செந்தில்நாதன் – பாஸ்கரன் ஆதரவாளர்கள் எதிரெதிர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் செந்தில்நாதனை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றக் கோரி சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. 'கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் உண்மை விசுவாசிகள்' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''சிவகங்கை மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் கழக நிர்வாகிகளை அடிமைப்படுத்தியும், ஒரு சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தராமலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜவிற்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு அதிமுகவை படுகுழியில் தள்ளிய சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனை மாற்றி, சிவகங்கை மாவட்டத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவ்வபொழுது போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால் அதிமுகவிலேயே மாவட்டச் செயலாளருக்கு எதிராக அக்கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story