சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இன்று முதல் டோக்கன் வினியோகம்

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இன்று முதல் டோக்கன் வினியோகம்
கலெக்டர் தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 77 ஆயிரத்து 575 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 983 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 558 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்குவதற்காக விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமம் இன்றி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Next Story