இருவேறு இடங்களில் சாலை மறியல்

இருவேறு இடங்களில் சாலை மறியல்
மறியல்
கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள 1,2,3 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் கச்சிராயபாளையம் - சின்னசேலம் சாலையில் தெங்கியாநத்தம் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய துணைச் சேர்மன் அன்பு மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் வேலை வழங்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 10.40 மணி அளவில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய் பட்டினம் கிராமத்தில் முறையாக பணி வழங்கப்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 11 மணிக்கு கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையின் குறுக்கே கற்களை அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 11.30 மணிக்கு கலைந்து சென்றனர். ஒரே நாளில் இரண்டு கிராமங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story