அமைச்சர் பேட்டி

அமைச்சர் பேட்டி
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஈரோட்டில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மட்டும் 10 பணிகள் ரூ.3 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் முடிந்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றோம். ஏற்கனவே துணை முதல் - அமைச்சர் ஈரோடு வந்த போது 13,000 பேருக்கு ஒரே இடத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், திறந்தும் வைக்கப்பட்டது. அதேபோல் முதல்-அமைச்சர் ஈரோடு வந்தபோது 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சிக்கையா நாயக்கர் கல்லூரி என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமி விளையாட்டு அரங்கம் மிகப்பெரிய நூலகம் வரவேண்டும். இதையெல்லாம் முதல்-அமைச்சர் சொல்லி இருக்கின்றார். இதுபோன்று பல நூறு திட்டங்களை அறிவித்திருக்கின்றார். அதற்கான பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. இந்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. அரசு எந்த இடத்திலும் விடவில்லை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த குற்றச்சாட்டையும் அரசின் மீது வைக்க முடியாது. நிறைய விஷயங்களுக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார்கள். ஆனால் எதில் சி.பி.ஐ விசாரணை தேவை என்பதில் ஒரு முறை உள்ளது. மாநில காவல்துறை நடவடிக்கை தொய்வாக இருந்தால் அதில் கேட்பது நியாயம் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அப்படி இருக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்பதில் நியாயம் இல்லை. விதி மீறிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன அந்த அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படுகிறது. அதில் சிறு, சிறு பிரச்சனைகள் நடைமுறை சிக்கல்களை சரி செய்து உள்ளோம். 2500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்டுவதற்கு காலதாமதம் செய்ய தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. உரிய விதிமுறைப்படி கட்டுமான பணிகளை தொடங்கி விடலாம். காலதாமதத்தை தவிர்ப்பதற்காக தான் இதனை நடைமுறைப்படுத்துகிறோம். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிசாமி, 45 -வது வார்டு கவுன்சிலர் பிரவீனா சந்திரசேகரன், ஈரோடு மாநகர துணைச் செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story