நீர் திறப்பு
Erode King 24x7 |3 Jan 2025 4:25 AM GMT
பவானிசாகர் அணையில் இருந்து பாசனங்களுக்கு 2,600 கன அடி நீர் திறப்பு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.51 அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 617 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 2, 600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடியில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.01 அடியை நெருங்கியுள்ளது.
Next Story