பரிதாப நிலையில் பஸ் நிலையம் பயணியர் சுகாதாரம் கேள்விக்குறி

பரிதாப நிலையில் பஸ் நிலையம் பயணியர் சுகாதாரம் கேள்விக்குறி
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வெளியேறும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் நகரின் மையத்தில் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலையத்தில், தினமும் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தை ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் நிலையில், சுகாதாரமாக இருக்க வேண்டிய பேருந்து நிலையம் படுமோசமாக உள்ளது. பேருந்து நிலையம் முழுதும் சாலை சேதமாகி, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில், பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. பயணியர் மூக்கை பிடித்து நடக்க வேண்டியுள்ளது. அதேபோல், பேருந்து நிலையம் வெளியே, காமராஜர் சாலையிலும் கழிவுநீர் வெளியேறி, அப்பகுதியில் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம் உள்ளேயும், வெளியேயும் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், கோட்டை விடுவதாக பயணியர் புகார் தெரிவிக்கின்றனர். கழிவுநீரை அகற்றி, பேருந்து நிலையத்தை துாய்மையாக வைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story