மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையம் துவக்கம்
Chengalpattu King 24x7 |3 Jan 2025 5:18 AM GMT
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையம் துவக்கம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையம் துவக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில், 250 ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விபத்து அவரச சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, இதய பிரிவு, குழந்தைகள் நல வார்டு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் தனித்தனியாக உள்ளன. இம்மருத்துவமனைக்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். தினமும், புறநோயாளிகளாக 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக 1,700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில், முழு உடல் பரிசோதனை மையம் பெயரளவிற்கு செயல்பட்டு வந்தது. இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், தனியாக ஒரு கட்டடத்தில் முழு உடல் பரிசோதனை மையம் அமைத்து, உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை நிர்வாகம் சீரமைத்தது. இந்த முழு உடல் பரிசோதனை மையம் திறப்பு விழா, மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் தலைமையில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க.., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார். அப்போது, உடல் பரிசோதனை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story