கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூரை அமைக்கும் பணி
Chengalpattu King 24x7 |3 Jan 2025 5:21 AM GMT
கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூரை அமைக்கும் பணி
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், ஓ.எம்.ஆர்., சாலை, வண்டலுார் சாலை, இ.சி.ஆர்., கோவளம் சாலை பிரிந்து செல்கிறது.இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலகம், காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கடைகள், தனியார் மருத்துவமனைகள், மனை பிரிவுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. அனைத்து தரப்பினரும், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திலிருந்தும், கேளம்பாக்கம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்து நிலையத்திற்குள் ஒரு பகுதியில் கூரை இல்லாததால், வெயில் மற்றும் மழைக்காலங்களில், பயணியர் அவதிப்பட்டனர். இதனால், பேருந்து நிலையத்திற்குள் கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இப்பேருந்து நிலையத்தில் கூரை அமைக்க, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story