வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் வைக்கத்திற்கு

புதிய பேருந்து சேவை தொடக்கம்
கேரளா மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலை சுற்றி தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து கூட செல்ல கூடாது என்ற தடையை, தந்தை பெரியார்  தனது போராட்டத்தால் உடைத்து எறிந்தார். இதன் நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பில் வைக்கத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும், கேரளா மாநிலம் வைக்கத்தில் இருந்து, தமிழகத்தில், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி வரை இரு மார்க்கத்திலும் தமிழக அரசின் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து சேவையை, கடந்த 1-ம் தேதி இரு மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பேருந்தினை நாகை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜி.விஜயகுமார் மற்றும் உதவி பொறியாளர் ப.வீரமணி, தொ.மு.ச. தொழிற்சங்க நாகை பணிமனை செயலாளர் பா.முருகையன் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். இது குறித்து, நாகை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜி. விஜயகுமார் கூறியதாவது அரசு விரைவு பேருந்து வேளாங்கண்ணி யில் இருந்து மதியம் 4,30 மணிக்கு புறப்படும். தஞ்சாவூர், திருச்சி, கோட்டயம் மார்க்கமாக, காலை 8 மணிக்கு வைக்கம் சென்றடையும்.வைக்கத்தில் இருந்து மதியம் 4  மணிக்கு பேருந்து சேவை தொடங்கி, மறுநாள் காலை 7.30 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும் என்றார். தமிழகம், கேரளா என இரண்டு மாநிலத்திற்கு இடையே பேருந்து சேவை தொடங்கி இருப்பது, இரு மாநில மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story