நிலக்கடலையில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி, களையெடுப்பு பணி தீவிரம்

X
தஞ்சையை அடுத்த மருங்குளம் பகுதியில் நிலக்கடலையில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து வரும் வயல்களில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூரை அடுத்த மருங்குளம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உளுந்து பயிரை ஊடுபயிராக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். உளுந்து பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நிகர வருமானம் கூடுதலாக கிடைப்பதுடன், நிலக்கடலை பயிரை தாக்கும் சிவப்பு கம்பளி பூச்சி, படைப்புழு. சுருள்பூச்சி ஆகியவற்றின் பாதிப்பும் கணிசமாக குறைகிறது. உளுந்து பயிர் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணின் வளத்தை கூட்டுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் ஆண்டுதோறும் சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு, பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்படும், மேலும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட சில இடங்களில் தென்னந்தோப்புகளில் ஊடு பயிராகவும், நிலக்கடலையில் ஊடுபயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து பயறு விதைப்பு செய்யப்பட்ட 70 நாட்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி விடும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தை, மாசி, பங்குனி, சித் திரை பட்டங்களில் வம்பன்- 8. ஆடுதுறை-5 உள்ளிட்ட உளுந்து ரகங்கள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. அதன்படி, மாவட்டத்தில், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில், கோடை சாகுபடியாக உளுந்து பயிறு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் உளுந்து சாகுபடி செய்த இடங்களில் களை அதிக அளவில் மண்டி உள்ளது. அதனை களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

