காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய மின் ஆற்றல் பங்கு என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல் பொறியியல் மாணவர்களுக்கான கருத்தரங்கம்

காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய மின் ஆற்றல் பங்கு என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல் பொறியியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் இன்று(03.01.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சூரிய மின் ஆற்றல் பங்கு( Solar Energy for Tackling Climate Change) என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல் பொறியியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்டுமானத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், வடிவமைப்பு மூலமும், மாற்று பொருட்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்களில் ஆற்றல் திறன் கொண்டவைகளை பயன்படுத்துதல் அதற்கான தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தமிழக அரசின் முன்னெடுப்புகள், சுற்றுச்சூழலில் மரபு மற்றும் மரபுசாரா ஆற்றல் வளங்களின் விளைவுகள், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து கட்டடம் கட்டுபவர்கள், கட்டடம் அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடவியல் பொறியியல் மாணவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: உலகம் முழுவதும் இன்றைக்கு அதிகமாக நடக்கக்கூடிய ஒரு கலந்துரையாடல் அல்லது விவாதம் பயிலரங்கம் என்று எடுத்துக் கொண்டால் மிக அதிக எண்ணிக்கையில் அது காலநிலை மாற்றம் பற்றியதாக தான் இருக்கிறது. இதை இன்னும் நாம் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான விளைவுகளை நாம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மிக சிறிய அளவிலான வெப்பநிலை அதிகமானால் கூட, அது நேரடியாக இந்தியா போன்ற நாடுகளின் உணவு உற்பத்தியில் 20 முதல் 30 சதவிகிதம் பாதிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் பல்லுயிர்களின் சமநிலையும் பாதிப்படைகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகத்தை பாதிக்க தொடங்கிவிட்டன. இதை எல்லாம் பார்க்கும்போது இன்று நாம் அதிகப்படியாக எல்லோரும் பேச வேண்டிய தலைப்பு, செயல்பட வேண்டிய பகுதியை நாம் குறைவாக பேசப்பட்டு, மிகக் குறைவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இன்று நாம் பெரும்பாலும் மின் ஆற்றலை புதுப்பிக்க இயலாத சக்தி ஆற்றலின் மூலமே பெறுகிறோம். இந்த ஆற்றலை நம் பயன்பாட்டின் நேரடியான செயல்பாடுகளின் மூலம் கணிசமான அளவு குறைக்க முடியும். கட்டிடத் துறையை எடுத்துக்கொண்டால், இயற்கையாகவே சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்குமாறும், அந்த கட்டிடத்தினுடைய ஜன்னல்கள் இயற்கையாகவே காற்றோட்டம் உள்ளவாறும் பயன்படுத்தும் மின் மற்றும் மின்னணு சாதனங்களில் அதிக ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை பயன்படுத்துதல் போன்றவை மூலம் ஆற்றலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், கட்டிடத்துறையில் பசுமை கட்டிட வடிவமைப்பிற்கு பல்வேறு தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவு போன்று துல்லியமாக ஆராய்ந்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்களும் உள்ளன. இதனை பல்வேறு நாடுகள் கடைபிடித்து அதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகள் செய்து முன்னேறி வருகின்றன. இது குறித்து எல்லாம் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டும். அதன் மூலமாக அவற்றை உங்களுடைய நுகர்வோர்களுக்கு நீங்கள் அதை கடத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலமாகத்தான் நாம் எதிர்காலத்தையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்ற வேறு முக்கியமான பருவநிலை கால பாதிப்புகளை நாம் சரி செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.
Next Story