மதிப்பு கூட்டு பொருட்களுக்காக தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு

மதிப்பு கூட்டு பொருட்களுக்காக தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு
நிகழ்வுகள்
மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்காக தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படுகிறது என்றார் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெமில்) அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா, நிறுவன நிர்வாகம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: வாகன உற்பத்தி, மின்னணு, ஜவுளி, தோல், டயர் உள்ளிட்ட துறைகளில்  மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இதேபோன்று வேளாண் துறையிலும், உணவு பதப்படுத்துதல் துறையிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டும். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால் விவசாயிகளின் வருவாய் பெருக வேண்டும். அதற்கு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் செய்ய வேண்டும் என்பது மிக மிக அவசியம். அதன் அடிப்படையில் தஞ்சாவூரில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்காக சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படுகிறது. இதேபோல, திருவாரூரிலும், மன்னார்குடியிலும் வேளாண் சார்ந்த தொழிற்பேட்டைகள் தொடங்குவதற்கு நிலம் தேர்வு செய்து வருகிறோம் என்றார் ராஜா. முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் என்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது: தமிழக அரசின் ரூ. 5 கோடி மானியத்துடன் அரிசி உமியிலிருந்து சிலிக்கான் உற்பத்தி செய்கிற திட்டம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இந்த மாநாட்டில் விவசாயிகள் பயிற்சி பெற்று விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார் பன்னீர்செல்வம். இவ்விழாவுக்கு நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகச் செயலர் சுப்ரதா குப்தா, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான கே. அழகுசுந்தரம், திருவனந்தபுரம் இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன், அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின் கர்நாடக இணைத் தலைவர் அஞ்சு மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா தமிழ்நாடு தலைவர் அரவிந்தன் செல்வராஜ் வரவேற்றார். இணைத் தலைவர் கே. மாரியப்பன் நன்றி கூறினார். இந்த மாநாடு, கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைகிறது.
Next Story