மத்திய அரசு நிதியை விட நெருக்கடிதான் கொடுக்கிறது வேளாண் துறை அமைச்சர் பேட்டி

மத்திய அரசு நிதியை விட நெருக்கடிதான் கொடுக்கிறது வேளாண் துறை அமைச்சர் பேட்டி
நிகழ்வுகள்
மத்திய அரசு நிதி கொடுப்பதை விட நெருக்கடிதான் கொடுக்கிறது என்றார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாகக் கொடுப்பதில்லை. மத்திய அரசு கொடுக்காவிட்டாலும், தமிழக அரசே பொறுப்பேற்றுக் கொடுக்கிறது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறுகிற சோதனை என்பது தமிழக அரசுக்கு நெருக்கடிகள் கொடுப்பதற்காகவே நடத்தப்படுகிறது. தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறதே தவிர, நிதி தருவதில்லை. இதை மக்கள் புரிந்து கொண்டுதான் கடந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியைத் தந்தனர். இந்த அரசு மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இச்சோதனை நடத்தப்படுகிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு இந்த அரசுக்கு முழுமையாக ஆதரவு தருகின்றனர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகளில் மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 1,023 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அரசு கணக்கீடு எடுத்து வருகிறது என்றார் பன்னீர்செல்வம்.
Next Story