கும்பகோணம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
Thanjavur King 24x7 |4 Jan 2025 6:20 AM GMT
மருத்துவம்
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே 108 ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கஞ்சனூரைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி ராஜேஸ்வரி (35). நிறைமாத கா்ப்பிணியான ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை காலை துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரின் பரிந்துரையில் ராஜேஸ்வரியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செவிலியா் வாசுகி மற்றும் பணியாளா் தமிழரசி ஆகியோா் அழைத்துச் சென்றனா். திருவிடைமருதூா் - திருபுவனம் இடையே சென்றபோது 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்பாக பிரசவம் பாா்த்த செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளரை அனைவரும் பாராட்டினா்.
Next Story