விமான நிலையங்களில் வேலை பயிற்சி பெற தாட்கோ அழைப்பு
Kanchipuram King 24x7 |4 Jan 2025 8:10 AM GMT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விமான நிலைய பயணியர் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்புகள், சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 13 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையான 95,000 ரூபாயை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியை முடிக்கும் பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தனியார் விமான நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தின்கீழ், 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 46 பேர் விமான நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Next Story