அல்லாபாத் ஏரிக்குள் தொடரும் அத்துமீறல்

அல்லாபாத் ஏரிக்குள் தொடரும் அத்துமீறல்
அல்லாபாத் ஏரிக்குள் தொடரும் அத்துமீறல் மரம் வெட்டுவதால் மான்களுக்கு அச்சுறுத்தல் மரம் வெட்டுவதால் மான்களுக்கு அச்சுறுத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி உள்ளது. இந்த ஏரி, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சிக்கல் பல ஆண்டுகளாகவே உள்ளது.இரு நிர்வாகத்தினரும், தங்கள் கட்டுப்பாட்டில் இந்த ஏரி இல்லை எனக் கூறி வரும் நிலையில், ஏரியில் உள்ள வளங்களை சிலர் கபளீகரம் செய்து வருகின்றனர். மேலும், ஏரிக்குள் பல மான்கள், குட்டிகளுடன் வாழ்ந்து வருகின்றன.இவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் உள்ள கருவேல மரங்கள், வேலிகாத்தான் மரங்களை சிலர் வெட்டி விற்பனை செய்து வருவதால், ஏரிக்குள் உள்ள மான்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏரிக்குள் உள்ள மரங்களை அத்துமீறி சிலர் வெட்டி விற்பனை செய்வது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. தற்போது, இயந்திரங்களை கொண்டு, ஏரிக்குள் மரங்களை வேகமாக வெட்டி வருகின்றனர். ஏரி பராமரிப்பு இன்றி உள்ளதால், பலரும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த ஏரியை சீர்செய்து, கரைகளில் நடைபயிற்சி செய்ய பாதை, மின்விளக்கு, இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி சார்பில் இந்த ஏரியை சீர்செய்ய நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வரும் நபர்கள் மீது, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story