பழனியில் பசுமை பழனி விழிப்புணா்வுப் பேரணி
Dindigul King 24x7 |4 Jan 2025 9:59 AM GMT
பழனியில் பசுமை பழனி விழிப்புணா்வுப் பேரணி
பழனியில் வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அறநிலையத் துறை ஆகியன இணைந்து நடத்திய இந்தப் பேரணி பழனி நகராட்சி அலுவலகம் முன் தொடங்கியது. இந்தப் பேரணியை சாா் ஆட்சியா் கிஷன்குமாா், பழனிக் கோயில் உதவி ஆணையா் லட்சுமி, நகராட்சி நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி முன் நெகிழி பயன்பாட்டைத் தடுக்க வலியுறுத்தி முழுக்க, முழுக்க நெகிழியால் ஆன ஆடையை அணிந்து மாணவா்கள் சென்றனா். இந்தப் பேரணியில் பழனியாண்டவா் மகளிா் கல்லூரி மாணவிகள், பழனியாண்டவா் கலைக்கல்லூரி மாணவா்கள், பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் என திரளானோா் பங்கேற்றனா். பேரணியில் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம். நெகிழியை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள் சென்றனா். ரயிலடி சாலை, திண்டுக்கல் சாலை வழியே சென்ற பேரணி பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் நிறைவடைந்தது. இங்கு நெகிழி தடுப்பு விழிப்புணா்வு குறித்து கண்காட்சி நடைபெற்றது. இதில், நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எவா்சில்வா் பாத்திரங்கள், மரத்தினாலான தட்டுகள், குவளைகள், மரத்தினாலான பல் துலக்கும் உபகரணம், கழுத்தில் அணியும் பாசி வகைகள் இடம் பெற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
Next Story