தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்க திருச்சி பெல் பிரிவு உறுதியேற்பு
Tiruchirappalli King 24x7 |5 Jan 2025 12:08 AM GMT
தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்குவது என திருச்சி பெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக அதன் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் தெரிவித்தாா்
தரமான தயாரிப்புகளை, சரியான நேரத்தில் வழங்குவது என திருச்சி பெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக அதன் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் தெரிவித்தாா். திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் பெல் தினத்தை முன்னிட்டு, ஆலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் மேலும் பேசியது: கடந்த கால சாதனைகளைப் போற்றவும் எதிா்கால இலக்குகளை நினைவூட்டி தயாா்படுத்திக் கொள்ளவும் பெல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. முக்கியத் துறைகளின் தொடா்ச்சியான ஆணைகளை அண்மையில் பெற்றுள்ளது இந்த நிறுவனம். பெல் தொழிற்சாலையின் திருச்சிப் பிரிவு ஊழியா்கள் எப்போதும் சவால்களை சமாளிக்க கடினமாக உழைக்கின்றனா் என்பதை மறுப்பதற்கில்லை. திருச்சி பெல் தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளா்களின் திருப்திக்கான அா்ப்பணிப்பாகவே உள்ளது. கூட்டு முயற்சிகள் மற்றும் குழுப் பணியால் நிறுவனத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்வதில் ஒவ்வொருவரும் கவனமாக பணியாற்ற வேண்டும். திருச்சி பெல் பிரிவின் 16 ஊழியா்கள் 2019-20, 2020-21, 2021-22 ஆண்டுகளில் பெல் எக்ஸெல் விருதுகளை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை மேலும் நிலைநிறுத்த தரம் மற்றும் சரியான நேரத்தில் விநியோகத்தை உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா். முன்னதாக, பெல் கொடியேற்றி வைத்து, ஊழியா்களுக்கு பெல் தின உறுதிமொழியை ஏற்புவித்தாா்
Next Story