பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Chennai King 24x7 |5 Jan 2025 4:26 AM GMT
பழநியில் கடந்தாண்டு நடை பெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைந்தது. அத்துடன், தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும் கொள்ளச் செய்யும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்களின் ஆசி உரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கத்தில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கி மாநாட்டின் நிகழ்வு குறித்த வண்ணப் புகைப்படங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பழநி 2024 சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறை செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story