முதியவர் பலி
Erode King 24x7 |6 Jan 2025 5:22 AM GMT
பாசூர் காவிரி ஆற்றில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி மகன், மகள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரி அனுமதி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மொளசி கல் பச்சப்பாளி, சள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (60). மீனவர். இவரது மகன் அருள் (36), மகள் சரண்யா (38) ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் அருளும் மீனவர் தான். இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக தங்கராஜ், அருள், சரண்யா ஆகிய மூன்று பேரும் மொளசி காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் இருந்து மறுகரைப் பகுதியான ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றின் கரைக்கு வந்துள்ளனர். மின் மயானத்திற்கு பின்புறம் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் அமர்ந்து மூன்று பேரும் மீன் பிடி வலையில் விழுந்த சிக்கலை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேனீ பூச்சிகள் கூட்டமாக வந்து மூன்று பேரையும் கடித்துள்ளது. இதில் தங்கராஜ், மகன் அருள், மகள் சரண்யா ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தங்கராஜ், அருள் மற்றும் சரண்யாவை மோட்டார் சைக்கிள் மூலம் மொளசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில் தங்கராஜை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இறந்த தங்கராஜின் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த அருள், சரண்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story