ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் பரிசு

X
அரியலூர் ஜன.6- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜெயங்கொண்டத்தில் க.சொ.க. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மட்டுமே மாநில தேர்தலுக்கான வாக்காளர்களாக உள்ளனர். அந்த வகையில் 800 பேரின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாநில சங்க தேர்தல் ஆணையர் களால் வெளியிடப்பட்டது . மாநில நிர்வாகிகள் தேர்வு மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த முறை இதற்கான தேர்தல் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. தேர்தலில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் முறை கையாளப்பட்டது. மாநில சங்க தேர்தல் ஆணையர்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணகிரி மூர்த்தி, விழுப்புரம் வள்ளல்பாரி , திருச்சி சங்கர், திருநெல்வேலி துரைபாண்டி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட்டனர். வாக்களித்த பின்னர் முடிவில் 800 உறுப்பினர்களுக்கு 709 பேர் வாக்களித்திருந்தனர். இறுதியில் மாநில தலைவராக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி, மாநில பொதுச்செயலாளராக திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த சுந்தர்ராஜ், மாநில பொருளாளராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மாநில தலைமை நிலைய செயலாளராக செந்தில்குமார், மாநில துணைத்தலைவர்களாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொய்யாமொழி, மாநில அமைப்புச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்,மாநில பிரச்சார செயலாளராக கதிரவன், மண்டல செயலாளர்களாக பக்கிரிசாமி, அருள்முருகன், பிரபு, சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலுகான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் ராஜா , ஆனந்த், மணிமாறன், ரஞ்சித்,உள்ளிட்ட மாவட்ட ,வட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாநில நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையர்களால் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அரியலூர் மாவட்ட சங்கத்தால் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விரைவில் இவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

