சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
Erode King 24x7 |8 Jan 2025 5:32 AM GMT
பவானிசாகரில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் சலவை ஆலை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் 8 ஏக்கர் நிலப் பரப்பளவில், 1975 ஆம் ஆண்டு, பவானிசாகர் சாய சலவை அச்சு தொழிற்சாலை இயங்கி வந்தது. 100 தொழிலாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சாய சலவை தொழிற்சாலையில் இருந்து அரசு துறைகளான ரயில்வே, மருத்துவமனை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான சீருடைகள் ஆகியவற்றை தயாரித்து அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை பயனற்று, முட்புதர்கள் சூழ்ந்து, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையான ரூ. 65 லட்சத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ரூ.65 லட்சம் அகவிலைப்படி தொகையினை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த 12 வருடங்களாக அகவிலைப்படி தொகை ரூ. 65 லட்சம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும், பயனற்று கிடக்கும் தொழிற்சாலையை திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கண்டித்தும், ஆலைத் தொழிலாளர்கள் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த 12 வருடங்களாக சலவை ஆலை மூடப்பட்டு பயனற்று கிடைக்கிறது. 8 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடத்தில் கடந்த சில மாதங்களாக சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. சமூக விரோத கும்பல் சூதாடுவதும், மது அருந்தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல அச்சமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story