லாரி டயர் வெடித்து விபத்து
Erode King 24x7 |8 Jan 2025 5:38 AM GMT
சித்தோடு அருகே கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி டயர் வெடித்து விபத்து டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கோயம்புத்தூரில் உள்ள தனியார் அரவை மில்லில் இருந்து நேற்று மாலை மாட்டு தீவனம் (தவிடு) ஏற்றிக்கொண்டு சேலத்தை சேர்ந்த கனரக லாரி டிரைவர் லோகேஷ், சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் என்னுமிடத்தில் கனரக லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் முன்பக்க வலதுபுற டயர் வெடித்தது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் சுமார் 30 மீட்டர் தொலைவிற்கு வலது புறம் இழுத்துச் சென்று நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கனரக லாரியை ஓட்டி வந்த டிரைவர் லோகேஷ் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த நிலையில் சாலையின் குறுக்கே கவிழ்ந்த லாரியில் ஏற்றி வரப்பட்ட நூற்றுக்கணக்கான தவிடு மூட்டைகள் சாலையில் சரிந்தன, இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் ராட்சத கிரேன் எந்திரம் வரவழைத்து விபத்துக்கு உள்ளான லாரியினை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story