இஸ்ரோ புதிய தலைவராக குமரியை சேர்ந்தவர் நியமனம்
Nagercoil King 24x7 |8 Jan 2025 6:24 AM GMT
கன்னியாகுமரி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) புதிய தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். வி.நாராயணன் ஜனவரி 14 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இது தொடர்பாக வி.நாராயணன் கூறுகையில், ''இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு பிரதம மந்திரி என்னை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். 41 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறேன். பல்வேறு திட்டங்களின் இயக்குநராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவங்களினால் எனக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பதவியை ஒரு மாபெரும் பொறுப்பாகத்தான் கருதுகிறேன். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற விண்வெளித் துறையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை இஸ்ரோ மூலம் செய்வேன். கன்னியாகுமரியின் மேலக்காட்டுவிளை எனும் சிறு கிராமத்தில் எளிய குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அப்பா விவசாயத்தோடு ஊருக்குள்ளேயே சிறுதொழில்கள் சிலவற்றையும் செய்து வந்தார். அரசுப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில்தான் பயின்றேன். குடும்பக் கஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆசிரியர்களின் உதவியோடும் அவர்களின் ஆசிர்வாதத்தோடும்தான் கடினமாக படித்து இந்த நிலையை எட்டியிருக்கிறேன்." என்றார். 1984 லிலிருந்து இஸ்ரோவில் பணியாற்றி வரும் வி.நாராயணன் ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
Next Story