சின்னகாமன்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
Virudhunagar King 24x7 |8 Jan 2025 1:32 PM GMT
சின்னகாமன்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், திருமண உதவித்தொகை 04 பயனாளிகளுக்கு ரூ.36,000/- மதிப்பிலும், உழவர் பாதுகாப்புத்திட்டம் இயற்கை மரணம் ஈமக்கிரியை உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.2,12,500/- மதிப்பிலும், உழவர் அட்டையானது 21 பயனாளிகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், ஆதிதிராவிடர் நத்தம் இ - பட்டா 23 பயனாளிகளுக்கு ரூ.8,43,000/- மதிப்பிலும், நத்தம் பட்டா மாறுதல் ஆணையினை 7 பயனாளிகளுக்கும், சாலை விபத்து நிவாரணம் 18 பயனாளிகளுக்கு ரூ.9,40,000/-மதிப்பிலும், இலவச வீட்டுமனைப் பட்டாவானது 20 பயனாளிகளுக்கு ரூ.9,74,403/- மதிப்பிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.18,450/- மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.6000/- மதிப்பிலும் என மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.30.30 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.40 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு மட்டும் சுமார் ரூ.800 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். ஆனால் மூன்றில் ஒரு பகுதி மட்டும் தான் இந்த கடனை பெற்று முழுமையாக தொழிலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் கடனை பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள வேண்டும். மேலும், கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது. தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நமது மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய அளவில் இல்லை. அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரும்புச்சத்தின் அளவும் குறைவாக தான் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும். மேலும், கிராமங்களில் இன்னும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களினுடைய பழக்கம் ஒரு சில இடங்களில் இருக்கிறது. தொடர்ச்சியாக கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், இவற்றையெல்லாம் பொதுமக்கள் ஒரு சமூகமாக இணைந்து தடுக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
Next Story