யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
Chennai King 24x7 |8 Jan 2025 2:41 PM GMT
யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு உடனடியாக யுஜிசி விதிமுறைகள் திருத்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்கலைக்கழக மானிய குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய வரைவு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறார். 2018-ஆம் ஆண்டின் “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்” என்ற விதிமுறைகளை திருத்தம் செய்து, “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் (2025) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற வரைவை உருவாக்கியுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர் மட்டுமே நியமனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் ஒருவரையும், யுஜிசி தலைவர் ஒருவரையும், பல்கலைக் கழகம் ஒருவரையும் நியமனம் செய்வர் என கூறப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போது உள்ள விதிமுறை நீக்கப்படுகிறது. துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும், தனியார் துறையில் பணியாற்றியவர்களையும் நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு புதிய வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் மட்டத்தில்-நுழைவு நிலைப் பதவிக்கு நியமனம் கோரும் விண்ணப்பதாரர் யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நிலைகளில் பணி நியமனம் செய்யப்படுவதற்கு, பிஎச்டி கட்டாயம் மற்றும் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் தேவை. இதைப் போல துணைவேந்தர்கள் நியமனத்திற்கும் 1949 இல் ராதாகிருஷ்ணன் குழு, 1964 இல் கோத்தாரி குழு உள்ளிட்டவை துணைவேந்தர்களுக்கான கல்வி தகுதி, ஆளுமை திறன் போன்றவற்றை பரிந்துரை செய்துள்ளன. அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு இந்துத்துவ செயல்திட்டங்களுக்கு ஆதரவானவர்களை துணைவேந்தர்களாக நியமனம் செய்வதற்கு யுஜிசி முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மாநில உரிமைகளைப் பறித்து, ஆளுநர்களுக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்குவதும், பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து நேரடியாக யுஜிசி மூலம் ஒன்றிய அரசே அதிகாரங்களை எடுத்துக் கொள்வதும், கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைப்பதுடன் மாநில உரிமைகள் மீது நடத்தப்படுகிற அப்பட்டமான தாக்குதலாகும். பல்கலைக் கழகங்களை, கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுகளுக்குத்தான் முகாமையானதாக இருக்கிறது. இந்நிலையில் யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு உடனடியாக யுஜிசி விதிமுறைகள் திருத்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story