உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக் கோரிய மனு தள்ளுபடி
Chennai King 24x7 |8 Jan 2025 3:31 PM GMT
தண்டராம்பட்டு பஞ்சாயத்து யூனியனில் முதல் கூட்டம் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே தொடங்கியது என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டியைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரான ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தண்டராம்பட்டு பஞ்சாயத்து யூனியன் தேர்தல் முடிவடைந்து தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது. அதன்பிறகே யூனியன் கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து யூனியன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளில் இருந்தே உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் தொடங்குவதால், இந்த பஞ்சாயத்து யூனியனில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை. பஞ்சாயத்து சட்டப்பிரிவுகள் 18 மற்றும் 22 பிரகாரம் வரும் 2026-ம் ஆண்டு தான் எங்களுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே எங்களுக்கு பதவிக்காலத்தை நீட்டித்தும், சிறப்பு அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் என்பது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக்கொண்ட தினத்தில் இருந்தே ஆரம்பமாகி விடுகிறது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு அந்த பதவிகள் தானாகவே காலியாகி விடும் என்பதால்தான் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரர் வேண்டுமென்றால் சிறப்பு அதிகாரியின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story