இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு
Tiruppur King 24x7 |9 Jan 2025 12:18 AM GMT
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கேயம் பகுதி மக்கள் 250 பேர் வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
காங்கேயம் நகராட்சிக்கு உள்பட்ட சத்யா நகர், கோட்டை மாநகர், அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த, சொந்த வீடு இல்லாத 675 குடும்பங்களுக்கு கடந்த 1996 ஆம் ஆண்டு காங்கேயம் தாலுகாவுக்கு உள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி பகுதியில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் பல வருடங்களாக இந்த குடியிருப்பு பகுதிக்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காங்கயம் நகரத்திற்கு வந்து, வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். அதன் பின்னர் மேற்கண்ட பகுதியில் மீண்டும் குடிசை அமைக்க முற்பட்டபோது, இவர்களது வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பகுதியில் தகுதியுள்ள 250 குடும்பங்களுக்கு மீண்டும் முறையாக பட்டா வழங்க வலியுறுத்தியும், மேலும் அதே இடத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்திட்டன் கீழ் வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கேயம் வட்டாட்சியரிடம் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில், வட்டாட்சியர் மோகனனிடம் மனு அளித்தனர். இது குறித்து காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் கூறியபோது, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க 250 பேர் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Next Story