சர்வீஸ் சாலையில் குப்பை கழிவு போந்துாரில் தொற்று அபாயம்

சர்வீஸ் சாலையில் குப்பை கழிவு போந்துாரில் தொற்று அபாயம்
போந்தூர் சர்வீஸ் சாலையில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் ஆறு வழிச்சாலை 25 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம், சென்னக்குப்பம், மாத்துார், வல்லம், வடகால், போந்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், அடிப்படை தேவைக்காக இச்சாலையை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தவிர, ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, கார், பைக், தொழிற்சாலை பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் வல்லக்கோட்டை, மாத்துார், போந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. அவை சர்வீஸ் சாலையில் சரிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில், சரக்கு வாகனங்களில் குப்பை மற்றம் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து சாலையோரங்கள், சர்வீஸ் சாலைகளில் மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், வாகன ஓட்டிகள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, இந்த குப்பையை அகற்றுவதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story