ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி திருவிழா, பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பகல்பத்து விழா 31-ஆம் தேதி ஆரம்பமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா். பகல் பத்தின் கடைசி நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எனப்படும் நாச்சியாா் திருக்கோலத்தில் எழுந்தருளினார். இதையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து நீண்ட முடியுடன் பெண் கோலம் பூண்டு (மோகினி அலங்காரம்), பகல் பத்து மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினார். தொடா்ந்து அரையா் சேவையுடன் பொது ஜன சேவையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பகல்பத்து மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசலை அடைந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். இதைத் தொடா்ந்து ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை காலை 5.15 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.இந்த வருடம் சுமார் 3 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.
Next Story




