மாவட்ட அளவிலான கபாடி போட்டி

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபாடி போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாடு மாநில அளவிலான கபாடி போட்டியில் பங்கு பெற தேர்வாகி உள்ளனர். 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபாடி போட்டியில், மாவட்ட அளவில் 3- ம் இடமும், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபாடி போட்டியில், மாவட்ட அளவில் 3- ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் குமார் தலைமையில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், உதவி தலைமையாசிரியர் சுகுமாரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன், லெனின் ஆகியோரையும் பாராட்டினர்.
Next Story