சாலை பாதுகாப்பு
Erode King 24x7 |9 Jan 2025 6:32 AM GMT
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஈரோட்டில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை ஈரோடு உட்கோட்டம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு முள்ளாம்பரப்பு முதல் ஆணைக்கல்பாளையம் ரிங்ரோடு வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில், சாலை விதிகளை மதிப்போம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர் போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பேரணியில், ஈரோடு நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் மோகனசக்தி, திருப்பூர் சாலை பாதுகாப்பு உதவிக்கோட்டப் பொறியாளர் குணவதி, உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், காவல்துறை துணை ஆய்வாளர் கிருஷணன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில், கரூர் சாலையில் உள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா அருகில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பூங்காவை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, சாலையில் வைக்கப்படும் சிக்னல் குறித்து விளக்கப்பட்டது. மேலும், கரூர் சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story