பொதுவெளியில் சிறுநீர் கழித்தால் சென்சார் மூலம் ஒலிக்கும் அலாரம் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஏற்பாடு
Thanjavur King 24x7 |9 Jan 2025 7:29 AM GMT
கழிப்பறை
தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையத்தில், கட்டணக் கழிப்பறை, குளியலறை உள்ளது. மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்தின் எதிரே ஒரு இடத்தில் மட்டுமே இலவச கழிப்பறை உள்ளது. பேருந்து நிலையத்தில் அதிகளவில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படாததால், பலர் பொது வெளியில், சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் உள்ளிட்ட பலரும் முகம் சுளித்தபடி சென்றனர். மேலும், மழைக்காலங்களில் மழைநீருடன், சிறுநீரும் கலந்து பொதுவெளியில் தேங்கி நிற்பதால், நோய்த்தொற்று ஏற்படும் நிலை உருவானது. இலவச சிறுநீர் கழிப்பிடம் போதுமான அளவில் இல்லாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனைத் தடுக்க முதற்கட்டமாக பேருந்து நிலையத்தில், பொது வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 50 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் காணும் வகையில், கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சென்சார் கருவியை சிறுநீர் கழிக்கும் பகுதியில் பொருத்தியுள்ளது. மேலும், அங்கு உள்ள இரும்பு தகரத்தில் இரவு நேரத்தில் சைரன் போன்ற விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகரத்தில் இருந்து சில அடி தூரத்தில் ஒரு கோடும் வரையப்பட்டுள்ளது. யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் இந்த கோடு அருகே வந்தால் சென்சார் மூலம் அலாரம் சைரன் போன்ற சத்தத்துடன், விளக்குகளும் எரியத் துவங்கி விடுகிறது. இதனால், சிறுநீர் கழிக்க வருபவர்கள் அங்கிருந்து ஓடி விடுகிறார்கள். அதையும் மீறி யாராவது சிறுநீர் கழித்தால், 5 முதல் 10 வினாடிகள் வரை இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில், சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பேருந்து நிலையம் முழுவதும் பொருத்தப்பட்ட உள்ளது. இந்தக் கருவி மழைக் காலங்களிலும் செயல்படும் தன்மை கொண்டது" இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: "சென்சார் கருவி பொருத்தியதை பாராட்டுகிறோம். கூடுதல் அளவிலான இலவச கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்" என்றனர்.
Next Story