தஞ்சாவூர் மாநகராட்சி சீர்கேடுகளைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
Thanjavur King 24x7 |9 Jan 2025 7:31 AM GMT
ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் சீர்கேடுகளைக் கண்டித்து தலைமை அஞ்சலகம் அருகே அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதாரச் சீர்கேடுகள், பல்வேறு வகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான செ. செம்மலை தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். அமைப்புச் செயலர் ஆர். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலர் துரை. திருஞானம், மத்திய மாவட்டச் செயலர் மா. சேகர், மாநகரச் செயலர் என்.எஸ். சரவணன், பகுதிச் செயலர்கள் கரந்தை த. பஞ்சாபிகேஷன், வி. புண்ணியமூர்த்தி, டி. மனோகர், எஸ். சதீஷ்குமார், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகள் வெளியே வர வேண்டும்: பின்னர், செய்தியாளர்களிடம் செம்மலை தெரிவித்தது: திமுக ஆட்சியைக் கண்டித்து அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்வதன் மூலம் அந்த அளவுக்கு ஆட்சியின் நிலை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். விமர்சிப்பது மட்டுமல்லாமல் கூட்டணியிலிருந்தும் வெளியே வர வேண்டும். அப்போதுதான் மக்கள் மதிப்பர். ஆளுநரின் செயல்பாடு குறித்து அவரை மட்டுமே நாம் குறை சொல்லக்கூடாது. சட்டப்பேரவையிலிருந்து வெளியே ஆளுநர் செல்வதற்கான சூழ்நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கினர். ஆளுநரும், ஆட்சியும் மோதுகிற நிலை இருக்கக்கூடாது. அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. ஒற்றை தலைமையிலே எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கட்சியை வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலிமையாக உள்ளதால், இணைப்பு, ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் செம்மலை.
Next Story