மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
Erode King 24x7 |9 Jan 2025 8:05 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
தேர்தலின் போது எந்தவித புகார்களும் ஏற்படாதவாறு, மண்டல அலுவலர்களின் பணி இருக்க வேண்டும் என்று மாவட்ட அளவிலான தேர்தல் பிரிவு அதிகாரி மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்களில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தலைமையில், பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான தேர்தல் பிரிவு அதிகாரி மகேஸ்வரி கூறியதாவது : தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் முடியும் வரை தங்களது பணிகளுக்காக, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டல பகுதிக்கு பொறுப்பானவர்கள். இவர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள மண்டலத்திலுள்ள வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்ய வேண்டும். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த அறிக்கையை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோன்று, அங்குள்ள அடிப்படை வசதிகள், கடந்த கால தேர்தல் தொடர்பான விபரங்களை சேகரித்து அறிந்து கொள்ள வேண்டும். மேலும், தேர்தலின் போது எந்தவித புகார்களும் ஏற்படாதவாறு, மண்டல அலுவலர்களின் பணி இருக்க வேண்டும்.குறிப்பாக, எந்த ஒட்டுச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடக்கும் சூழல் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.இதில், 24 மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story