காங்கிரஸை முதன்மை கட்சியாக மாற்றுவதே இலக்கு: நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
Chennai King 24x7 |9 Jan 2025 10:08 AM GMT
காங்கிரஸை முதன்மை கட்சியாக மாற்றுவதே இலக்கு என்று நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மாநில ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பங்கேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற கிராம கமிட்டிகள் வலிமையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் ஒவ்வொருவரும், அவர்களின் பதவி காலத்தில், கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 100 நாட்கள் வேலை திட்டத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் மன்மோகன் சிங், சோனியாகாந்தி கொண்டு வந்தது மக்களுக்கு தெரியவில்லை. நாம் அவர்களுக்கு சொல்லவில்லை. அதனால் கிராம கமிட்டியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. காங்கிரஸை தமிழகத்தில் முதன்மையான கட்சியாக மாற்றும் இலக்கை அடைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். சிறப்பாகப் பணியாற்றும் பொறுப்பாளர்களைக் கவுர விக்க ‘பெட்டகம் திட்டம்’ செயல்படுத்தப்படும். அதன்படி, 100 சதவீதம் கிராம கட்டமைப்பை வலுப்படுத்தும் பொறுப்பாளர்களின் பெயர் பலகைகள், மாவட்ட, மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் வைக்கப்படும். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமையும் அளிக்கப்படும் என அவர் பேசினார்.
Next Story