திமுக ஆட்சியில் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் கருத்து
Chennai King 24x7 |9 Jan 2025 10:13 AM GMT
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு கவனம் எடுத்து அரசு செயல்படுவதை பற்றி குறிப்பிடாமல், சம்பந்தமின்றி பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். இந்த அரசு பெண்களுக்காக மகளிர் உரிமை தொகை கொடுக்கிறது என கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்திருக்கிறார். மகளிருக்கு உரிமைத் தொகை கொடுத்துவிட்டால், பாலியல் சம்பவங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடும் என முதல்வர் நினைக்கிறாரா? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. அதை அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என ஒருசில கட்சிகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுப்பது அரசியல் என்றால் அந்த அரசியலை பாஜக செய்யும். அதேபோல் இவ்வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின் சாதாரண அனுதாபி என்கிறார். அனுதாபியாக இருப்பவர் சக்திவாய்ந்த அமைச்சர்களோடு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுக்க முடியுமா, சாதாரண அனுதாபி ஒருவர் அமைச்சரை பக்கத்தில் நெருங்க முடியுமா, காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதற்கு அவர் தானே பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார்.
Next Story