ராசிபுரத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ராசிபுரத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் தோறும் தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அதைத்தவிர கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல், சாலை, தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 90-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மருத்துவ காப்பீடு தொகை பிடித்தம், மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கவில்லை என்றும், வருங்கால வைப்புநிதி தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தட்டான்குட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை வளாகம் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அதேபோல தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென திரண்டனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வார்டு முழுவதும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளில் ஈடுபடும் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாதாமாதம் கால தாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும் வட்டிக்கு பணம் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story