மெரினாவில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினர் கைது: அண்ணாமலை கண்டனம்
Chennai King 24x7 |9 Jan 2025 10:19 AM GMT
மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடம் அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் மோகன், கவுதம் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி நயினார், பாண்டித்துரை, கிஷோர், ஸ்ரீதர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக இளைஞரணி நிர்வாகிகளை காவல்துறை கைது செய்துள்ளது. நேர்மையான விசாரணை கோரும் குரல்களை ஒடுக்குவது, அப்பட்டமான ஜனநாயக மீறல் ஆகும். குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில், மேலும் மேலும் தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு என குறிப்பிட்டுள்ளார்.
Next Story