பேராவூரணி  ரயில்வே கேட் சாலையை சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

பேராவூரணி  ரயில்வே கேட் சாலையை சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை
கோரிக்கை
பேராவூரணியில் சேதமடைந்து கிடக்கும் ரயில்வே கேட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், சேது சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடுகிறது. இந்த கேட்டில் இரண்டு ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே சாலை குண்டுங் குழியுமாக உள்ளது. அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவிலான சிமென்ட் கற்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே இடைவெளி இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழும் சூழ்நிலை உள்ளது. ஏற்ற, இறக்கத்தில் பயணிக்கும் கார், பேருந்து போன்ற வாகனங்கள் குலுங்கி மோதுவதால், இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.  மேலும், ரயில்வே இடத்தில் அமைத்துள்ள சாலை மேடு பள்ளமாக வாகனங்கள் செல்வதற்கு பயனற்ற வகையில் உள்ளது. இந்த இடத்தை ரயில் கடந்து சென்ற பிறகு, ரயில்வே கேட்டில் இருபுறமும் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புறப்பட்டு செல்லும்போது, நெருக்கடியாலும், சாலை மேடு, பள்ளமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.  மேலும், நெடுஞ்சாலை துறையால், ரயில்வே கேட்டிற்கு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் அருகேயும் பள்ளமாக உள்ளது. இதனால் இந்தச் சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சமதளமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story