கலைஞரின் கனவு இல்லம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |9 Jan 2025 12:31 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஒப்பந்த காலத்திற்குள் வீடுகளை தரமானதாக கட்டி பயனாளிகளுக்கு வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், மொளசி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை எய்திடும் வகையில் முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் முறையாக கணெக்கடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தகுதி உள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3 தவணையாக தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவர்களுக்கு ரூ.1.00 இலட்சம் வரை வங்கியில் கடனுதவி வழங்கப்படுகிறது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாதவகையில் அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக பயனாளிகள் நம் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.213.21 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 8.1.2025 அன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சி மற்றும் இன்றைய தினம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், மொளசி ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வீடுகள் ஒப்பந்த காலத்திற்குள் தரமானதாக கட்டி பயனாளிகளுக்கு வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கூட்டப்பள்ளி ஏரி அருகில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய அமைவிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சித்தாளந்தூர் ஊராட்சிக்கு ரூ.7.90 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள நெகிழி அரைக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, தூய்மை பணியாளருடன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து கலந்துரையாடினார்.
Next Story