இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு.
Thiruvarur King 24x7 |9 Jan 2025 2:38 PM GMT
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது... தகைசால் தமிழர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டிற்கு இன்று பல பேராபத்துகள் இருக்கின்றன. ஒ ரேநாடு ஒரே தேர்தல் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. தமிழக ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ச்சியாக மூன்று ஆண்டு காலம் அவமரியாதை செய்து வருகிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது மரபு. இது ஆளுநர் ரவிக்கும் தெரியும். அவரை நிர்வகிக்கிற மோடிக்கும் தெரியும். அவரை நியமனம் செய்த குடியரசு தலைவருக்கும் தெரியும். சட்டமன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசியத்துக்கு எதிராக நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது என்று ஒரு தவறான பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்கிறது. தேசியத்துக்கு எதிராக செயல்படுவது பாரதிய ஜனதா கட்சி. அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி. அதை மூடி மறைத்து பிறர் மீது பழி போட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எல்லோரும் இணைந்து ஒன்றுபட்டு சர்வாதிகாரத்துக்கு எதிராக, பாசிசத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
Next Story