கிராம மக்கள் சாலை மறியல்
Komarapalayam King 24x7 |9 Jan 2025 4:13 PM GMT
தட்டான் குட்டை ஊராட்சி பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சி 15 வார்டு பகுதிகளை கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சி பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியாகும். இந்த ஊராட்சி தற்பொழுது பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதாக செய்திகள் வந்தவுடன், தமிழக அரசு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் இணையதளங்கள் வழியாக கருத்துகள் பதிவிடுமாறும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைத்தால், விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாக மாறிவிடும் என்றும், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி அனைத்தும் உயரும். ஊராட்சி பகுதியில் விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ ஏதுவாக உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும் என்பதால், தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்காமல், தனி ஊராட்சியாக நீடிக்க ஆணை பிறப்பிக்க வேண்டி திருச்செங்கோடு குமாரபாளையம் சாலையில் தட்டாங்குட்டை ஊராட்சியை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு குமாரபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியலின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story