காஞ்சி ரயில் நிலைய சுரங்கப்பாதை பணியில்...இழுபறி!
Kanchipuram King 24x7 |10 Jan 2025 3:07 AM GMT
காஞ்சி ரயில் நிலைய சுரங்கப்பாதை பணியில்...இழுபறி!: 2,000 குடும்பத்தினர் 4 கி.மீ., சுற்றும் அவலம்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல, 2022ல் துவங்கிய சுரங்கப்பாதை பணிகள், மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர். அதில், சுரங்கப்பாதை கட்டாததால், ரயில் பாதைக்கு மற்றொரு புறத்தில் வசிக்கும், 2,000 குடும்பத்தினர், 4 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய சிரமம் தொடர்வதாக தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து பொன்னேரிக்கரை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரையில் உள்ள புதிய ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இவ்வழியாக பயணியர் மற்றும் சரக்கு ரயில் சென்று வரும் நேரங்களில், ரயில்வே கேட் மூடப்படுவதால், இருபுறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 54.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ரயில்வே உயர்மட்ட பாலத்தை, கடந்த 2022 ல், ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிய மேம்பாலம் திறக்கப்பட்ட அன்றே, ரயில்வே கிராசிங் மூடப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. மூன்று மாதத்தில் பணி நிறைவு பெறும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்த நிலையில் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், ரயில்வே கிராசிங் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர், முத்தமிழ் நகர், ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நகரில் வசிக்கும், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 2 கி.மீ., துாரம் மேம்பாலத்தை சுற்றிக்கொண்டு தங்களது வீடுகளுக்கு சென்று வர வேண்டிய நிலை நீடிக்கிறது. சுரங்கப்பாதையின் பொருத்துவதற்காக ரெடிமேட் கான்கிரீட் பாக்ஸ் தயாரிப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்த பிறகும், அவற்றை சுரங்க பாதையில் பொருத்தி பாதை ஏற்படுத்தும் பணிகள் அப்படியே உள்ளன. ரயில்வே பாலத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது என, சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்திற்கு, கனகதுர்கை அம்மன் நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தலைவர் கதிர்வேலு கோரிக்கை மனு அளித்து இருந்தார். இருப்பினும் பணி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
Next Story